சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என ஊடகங்கள் மூலம் திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூர், திருவள்ளுவர் நகர், பெல் நகர், ஜெ.ஜெ.நகர், முகலிவாக்கம் உள்ளிட்ட இடங்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகலிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து குன்றத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். திமுக அரசு சென்னை மாநகர பகுதியில் சொட்டு நீர் கூட வரவில்லை என்றார்கள். ஆனால் இப்போது என்னுடன் வந்தவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.
திமுக அரசு வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது. ஏராளமான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் படகில் தான் சென்று கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால், மு.க.ஸ்டாலின் செய்தது என்ன? மழைநீர் தேங்கவில்லை என ஊடகங்கள் மூலம் திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்கினோம் என்று இபிஎஸ் கூறினார்.







