ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழநாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி ‘DMK FILES’ என்ற பெயரில் பட்டியலை வெளியிட்டார்.
அண்ணாமலை வெளியிட்ட அந்த சொத்து பட்டில் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆவடி நாசர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை நாங்கள் வைத்துக் கொண்டே இருந்தோம். ஆவின் பால் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. அதனை மக்கள் மன்றத்தில் பாஜக வைத்துக் கொண்டே இருந்தது. பால்விலை உயர்வுக்கு ஜி எஸ் டி தான் காரணம் என நாசர் சொன்னார். தொண்டரை கல் எறிந்த ஆவடி நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது.
பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு பணம் உயர்த்தி வழங்க வேண்டும். மக்களுக்கு பால்விலையை குறைக்க வேண்டும். புதியதாக வந்திருக்கும் அமைச்சர் இதனை செய்ய வேண்டும் தொழில்துறை அமைச்சராக டி ஆர் பி ராஜா வந்துள்ளார். எந்த குடும்பம் அதிக தொழில்நிறுவனங்கள் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொழில்துறை வழங்க வேண்டும் என்பது போல வழங்கப்பட்டுள்ளது. டி ஆர் பி ராஜா குடும்பத்தினர் அனைத்து துறையிலும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தொழில்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் குடும்பம் சராய ஆலைகளை வைத்துள்ளனர். திராவிட மாடல் அரசு சாராயத்தை உற்பத்தி முதல் விற்பனை வரை அவர்களே பார்த்துக் கொள்வது என முடிவு செய்து தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது போலும். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, பல ஊழல்களை செய்தவர் டிஆர்.பாலு. அவர் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு அதிகரிக்குமே தவிர ஒரு சதவிகிதம் கூட குறையாது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து மாற்றியது ஏற்புடையதல்ல. சிறப்பாக செயல்பட்டு மூன்று தலைமுறைகளாக தமிழ்நாட்டின் நலனுக்காக தனது குடும்பத்தை அர்ப்பணித்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என பிடிஆர் குறித்து முதல்வர் பேசியுள்ளார். இரண்டு மாதத்திற்கு முன் இப்படி பாராட்டிவிட்டு பேசிவிட்டு தற்போது மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன ? PTR ஆடியோ வந்த ஒரே காரணத்தினால், அவரை துறை மாற்றம் செய்தது சரியல்ல. தவறு செய்தது அவர் இல்லை. திமுகவின் முதல் குடும்பம்.
மெட்ரோ ரயில் விவகாரத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்த முதல்வர், பி டி ஆர் ஆடியோ தொடர்பாகவும் வழக்கு தொடுக்க அன்போடு கேட்கிறேன். அப்போது தான் முழு ஆடியோவும் நீதிமன்றத்தில் வழங்க முடியும். பி டி ஆரை பகடைக்காயாக பயன்படுத்த கூடாது என்பதற்காக தான் நான் அடுத்தடுத்த ஆடியோவை வெளியிடவில்லை.
எனக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலரும் வழக்கு தொடுத்து உள்ளனர். நான் முதலமைச்சரை பார்த்து சவால் விடுகிறேன். நீங்களும் குற்றம் செய்துள்ளீர்கள். பிடிஆர் டேப்பை ரிலீஸ் செய்ததற்காக நீங்கள் என் மீது மீண்டும் இன்னொரு வழக்கு போடுங்கள். பிடிஆர் டேப் 1 மணி நேரம் இருக்கிறது. நீங்கள் பிடிஆர் பைல்ஸ் பற்றி கேஸ் போடுங்கள். அது எல்லாம் கோர்ட்டில் வெளியே வரட்டும். இங்கே பிடிஆர் தவறு செய்யவில்லை. தப்பு செய்தவரை பற்றி பேசி இருக்கிறார். அதை பற்றி நீதிமன்றம் பேசட்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம்பி டி ஆர் பாலு, கனிமொழி, முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி என்று வரிசையாக எனக்கு எதிராக பல நீதிமன்றங்களில் 1461 கோடி ரூபாய்க்கு வழக்கு தொடுத்து உள்ளனர். இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்வு யாருக்கும் நடந்திருக்காது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள்., பாஜக இங்கொன்று அங்கொன்றும் இருப்பதாக கிண்டலாக பேசினார். இப்போது அவர்கள் போட்டு இருக்கும் அவதூறு வழக்குகளை பார்க்கும் போது, 1461 கோடி ரூபாய்க்கு வழக்கு போடும் அளவிற்கு நாங்கள் முன்னேறி உள்ளோம் என்பதை காட்டுகிறது. நீங்கள் அவதூறு வழக்கு போடுவற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல. எல்லாவற்றையும் நேருக்கு நேர் சந்திக்க தயார். ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் . அதில் புதிய அமைச்சர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.
ஆர் எஸ் பாரதிக்கு மூன்றாவது முறையாக சவால் விடுக்கிறேன் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். ஆருத்ராவிலிருந்து எந்த அமைச்சருக்கு பணம் சென்றிருக்கிறது என்பதை ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 நான் சொல்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. NDA வில் யார் சேர விரும்பினாலும் அது குறித்து நட்டாவும் பிரதமரும் முடிவெடுப்பார்கள். கர்நாடகாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து சாதனை படைக்கும். கர்நாடகாவை பொறுத்த வரையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறாக தான் இருக்கும். 113 சீட்டை தாண்டுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
ஓ பி எஸ் – டிடிவி சந்திப்பு குறித்து நான் பேச விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி நட்டா, அமித்ஷாவை சந்தித்துள்ளார். பன்னீர்செல்வம் மீது தனிப்பட்ட முறையில் பிரதமர், நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மத்தியில் மரியாதை உள்ளது.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.











