ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் மௌனம் காத்தன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“ நமது கலாச்சாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் திமுக வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அடையாளத்தை, பெருமையை பாதுகாக்க பாஜக. என்றும் முன்னிலையில் உள்ளது. அவர்கள் தூற்றல்களையும், பேச்சுக்களையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததோடு, அந்த விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் அரசு மவுனம் காத்தது. அவர்கள் நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அழிக்கப் நினைத்தார்கள். ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்தது நமது பா.ஜ.க. அரசு. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருமை. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டின் எந்தவொரு பெருமை மிக்க பாரம்பரியமிக்க விஷயமாக இருந்தாலும் மோடி இருக்கும் வரை அதை யாராலும் அசைக்க முடியாது.”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.







