2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கரூரில் மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அதிகமாக ஊழல் நடப்பதால், தொடர்ந்து நலிவுற்று இருக்கிறது. தேவையில்லாமல் அதிகளவில் அதிகாரிகள் இருப்பதால் அவர்களுக்கு அதிகம் செலவாகிறது. ஊழலும் நடக்கிறது. அதேபோல், மின்சாரத் துறை, போக்குவரத்து துறையில் அதிக லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மின்வெட்டு இல்லாத நிலையில், தற்போது திமுக ஆட்சியில் மட்டும் மின்வெட்டு வர காரணம் என்ன? அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழ்நாட்டில் இருக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின் வெட்டு இருக்கிறது. தொழில்களுக்கு மின்சாரம் மிக முக்கியம். கொரோனோவுக்குப் பிறகு தற்போது தொழில்கள் சீரமைந்து வரும் நிலையில் மின்வெட்டால் பாதிப்பு ஏற்படும் அச்சம் இருக்கிறது என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதுவும் செய்ய மறுக்கிறார்கள். மெளனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 30% காலாவதியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் திராவிட ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மக்கள் பாராட்டுகிறார்களா என்ற கேள்வி தான் எழுகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கை மக்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே தேமுதிக உதவி செய்து வருகிறது. அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் அதிகார போட்டிகள் தான் இருக்கிறது என கூறினார்.
மேலும், எதிர்கால தூண்களான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருக்கிறார்கள். விடுமுறை தினத்தில் கூட 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளதாக செய்தி வருகிறது. இது வேதனையான ஒன்று. மாணவிகளே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, கலாச்சார சீரழிவும் தற்போது அரங்கேறி வருவதாக வேதனை தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெற வேண்டும். அடுத்தவர்கள் மீது சாக்கு சொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அடுத்த தேர்தலுக்கு தேமுதிக அடுத்த கட்டத்திற்கு செல்லும். யார், யாரையும் தனிமை படுத்திட முடியாது. 2024 ம் ஆண்டு மிகப் பெரிய இடத்தை தேமுதிக அடையும். தேமுதிக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.








