பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு

நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பில் “கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு, மீட்பு மாநாடு” என்ற…

நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

கோவை காந்திபுரத்தில் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பில் “கோவை மறந்த
விடுதலைப் போர் வரலாறு, மீட்பு மாநாடு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் பேசியபோது, “கோவையில் இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்ட யாரும் இனி கனவிலும் நினைக்ககூடாது என்பதற்காக தான் இந்த மாநாடு. புதிய பாடத்தில் வ.உ.சி, தீரன் சின்னமலையின் வராறு மறைக்கபட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிமுன் அன்சாரி, “திராவிட மாடலுக்கு அன்றே வழிகாட்டியது அன்றைய கோவைப்புரட்சி. இந்தி பேசும் மாநிலங்களில் வகுப்புவாதம் முழுமையாக தூண்டபடுகிறது. பாஜகவிற்கு பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் மக்களிடம் வகுப்புவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வட இந்தியாவில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்” என்றார்.
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேசியபோது, “இந்தியாவில் உள்ள சாதி, மதங்களை ஒருங்கிணைத்து பாசிச வகையில் ஆட்சி நடத்த கட்டமைப்பை பாஜக ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “பாஜக டெல்லி ஊடகப் பிரிவு தலைவா்
நவீன் குமாா் ஜிண்டால்,பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா ஆகியோர்
நபிகளுக்கு எதிராக பேசியதை இக்கூட்டத்தில் கண்டிக்கிறேன். இதுவரை இருவரும் கைது செய்யபடவில்லை. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளது” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே தேசம் ஒரே கலாசாரம் என்ற அடிப்படையில்
பன்முகதன்மையை சிதைத்து விடுகிறார்கள். பலதரப்பட்ட மக்களின் வரலாற்றையும் சிதைத்து விடுகிறார்கள். இந்த வரலாறு பதிவு செய்யப்படவேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை; முகலாயர்களின் வரலாறு தான் இங்கே பதிவாகி இருக்கிறது என்று இங்கே ஒரு புது கதையைக் கட்டி விட்டிருக்கிறார். சங்பரிவார்களின் திட்டத்தை முறியடிக்க அனைவரும் அகில இந்திய அளவில் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார் திருமாவளவன்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.