பல்லடத்தில் PAYTM, GOOGLE PAY டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சட்டவிரோத மது விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர், சின்னிய கவுண்டம்பாளையம், காமநாயக்கன்பாளையம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடை பார் நடத்தி வருபவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மதுரை மண் பானை சமையல் முருகன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது பாரில் பணிபுரிந்த மருது என்ற ஊழியரை அடித்து கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது மாமனார் மகாலிங்கம், தம்பி நவீன் ஆகியோர் தற்போது 4 பார்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நான்கு பார்களிலும் காலை முதலே சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஒரு படி மேலே சென்று சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபாட்டில்களை வாங்க வருபவர்களுக்கு கூடுதல் வசதியாக GOOGLE PAY, PAYTM செயலிகள் மூலம் பணம் பெறுவதும் நடைபெற்று வருகிறது.
காலையிலேயே மது வாங்க வரும் மதுப் பிரியர்கள் இடம் பணம் இல்லை என்றால் அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு மது பாட்டில் விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இந்த நான்கு பார்களிலும் நடைபெற்று வருகிறது.எனினும் இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கள ஆய்வுக்கு சென்ற செய்தியாளர்களிடம், “நீங்கள் செய்தி போடுறதுனா போடுங்க.. காவல் துறையையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். எங்களை ஒன்றும் பண்ண முடியாது” என சவால் விடுத்துள்ளனர். சட்ட விரோத மது விற்பனையை தடுத்து காவல்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.







