தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், உண்மையான எதிர்க்கட்சி என்பது வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறன்றன என்ற வாதமும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற கட்சிதான் வலுவான எதிர்க்கட்சி என்ற விவாதமும் எழுந்துள்ளது.
கடைசியாக நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. அதிமுக 25 புள்ளி 47 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி 4 புள்ளி 92 சதவீத வாக்குகள் பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி அத்தேர்தலில் 1 புள்ளி 54 சதவீத வாக்குகள் பெற்றன. இந்த மூன்று கட்சிகள்தான் தாங்கள்தான் வலுவான எதிர்க்கட்சி என தங்களுக்கு தாங்களே கூறி வருகின்றனர்.
அதிமுகவில் இரட்டை தலைமை நிலவுவதால், இவர்கள் பெரும்பாலும் அறிக்கையோடு நிறுத்திக் கொள்கின்றனர். இதுவே அதிமுகவின் இடத்தை பிடிக்க மற்ற கட்சிகள் கடும் போட்டிப்போடுகின்றன. சில நேரங்களில் ஓபிஎஸ்-இபிஎஸ் என கூட்டறிக்கை வெளி வரும். அதுவும் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகின்றன. தனித்தனியாக அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
எல்லா பிரச்சனைகளுக்கும் மறவாமல் அறிக்கை கொடுத்து அரசின் கவனத்தை ஈர்ப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் உள்ளார். அன்புமணி தலைவரானவுடன், மக்களின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆன் லைன் ரம்மிக்கு எதிராக அவர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அரசின் சார்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டது. இதுதான் ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சியின் பண்புக்கு எடுத்துக்காட்டு எனக் கூறிவருகின்றனர் பாட்டாளி சொந்தங்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அவர்கள் வலுவான இருக்க கூடிய இடங்களில் அவர்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். மற்ற இடங்களில் கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்லை அவர்களுக்கு ஒன்று பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை இப்போதே கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் எங்க ஏரியாவில் நாங்க ராஜா, உங்க ஏரியாவில் நீங்க ராஜா என்பது போல் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியை பொறுத்தவரை டாப் கியரில் ஜெட் வேகத்தில் கிளம்புவார்.
சின்ன இடையூறு வந்தாலும் அப்படியே சோர்வடைந்துவிடுவார். நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரியில் தோல்வியடைந்திருந்தாலும், அதன் பின்னர் ராஜ்யசபா தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர். தாம் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறவில்லை என்பதால் சில காலங்கள் அமைதியாகவே இருந்தார். இப்போது பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளார். இது தொடர்ந்தால் மட்டுமே அவரும் சரி, அவரது கட்சியும் நிலைப்பெற முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாவிட்டாலும், அண்ணாமலை தாம் ஒரு வலுவான தலைவர் என்ற இமேஜை பெறுவதற்கு கடுமையாக போராடி வருகின்றனர். அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆரம்பத்தில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிய ஆளுங்கட்சி, தற்போது அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமே இல்லை என அரசின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவரது நடவடிக்கைகளுக்கு கைமேல் கிடைத்த பலனாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒரு எதிர்க்கட்சி அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியாக வருவதற்கு முக்கியதளமே, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களில் இருந்து நாங்கள் மாறுபட்டவர்கள் என்பதை நிரூபிப்பதே ஆகும். அதேபோல் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி தீர்வு காண்பது என்பது ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு வங்கி மட்டுமே நல்ல எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று தந்துவிடாது என்பதை அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் உணர்ந்திருக்கின்றனர்.
அதிமுக இவ்விவகாரத்தில் சற்று பின்தங்கியிருந்தாலும், தற்போது சுதாரித்துக் கொண்டு, கூட்டணி கட்சியான பாஜகவிற்கு கடிவாளம் போடுவது எப்படி என்பதை அறிந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடே பாஜக ஒரு காக்கா கூட்டம் என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் கூறிய வார்த்தைகள் சற்று கடினமாக இருந்தாலும், களநிலவரம் என்பது பாஜகவினர் ஊடகங்களில் தலைகாட்ட காட்டும் ஆர்வத்தை களத்தில் காட்டுவதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு திராவிட கட்சிகள் போல் ஒரு வலுவான அடித்தளம் இல்லாததே எனக் கூறப்படுகிறது.
இதனையெல்லாம் புரிந்து வைத்துக்கொண்டுதான் அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு ஒன்றும் இல்லை. பாஜகவை திட்டினால் எங்கள் தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள். அதற்காக அதிமுக நிர்வாகிகள் அப்படி பேசியிருக்கலாம் என கூறியுள்ளார் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் நேரத்து அரசியல் வித்தையை நன்கு அறிந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு மக்களின் பல்ஸ் நன்கு தெரியும். எனவே வரும் தேர்தலுக்கு முன் சுதாரித்து எழுந்துவிடுவர் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ உண்மையான எதிர்க்கட்சிகள் யார் என எதிர்க்கட்சிகள் தங்களுக்கு போட்டி போட்டுக் கொள்வது ஆளும் திமுகவிற்கு குஷியை கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இராமானுஜம்.கி










