முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எலான் மஸ்க் – AI புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் #VenkatPrabhu!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் இருவரும் சந்திப்பதை போன்ற AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் இருவரும் சந்திப்பதை போன்ற AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

சான் பிரான்ஸிக்கோ சென்ற முதலமைச்சர், அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர். பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பணி ஒருபுறம் இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவில், முதலமைச்சர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் இருவரும் சந்திப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவில், “இந்த AI உருவாக்கிய படம் உண்மையாக மாற விரும்புகிறேன். டெஸ்லா தமிழ்நாட்டிற்கு வந்தால் அது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த #GOAT சாதனை” என பகிர்ந்துள்ளார்.

முன்னதாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படத்தின் தலைப்பில் பதிவிட்டு எலான் மஸ்க் பதிவு ஒன்றை பகிர்ந்தது கவனம் பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.