ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்

இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…

இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க 16 நம்பர் சொல்லு சார்” என எவரோ ஒருவர், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஊழியர் போல தொலைபேசியில் பேசுவதிலிருந்து, ”1000 ரூபாய் கொடுத்து சேர்ந்தால் 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம்” என நமக்கு தெரிந்தவர்களே நம்மிடம் கூறுவது வரை டிஜிட்டல் வழி கொள்ளை பரிணாம வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது.

இவ்வாறு வருபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என போலீசார் தரப்பில் இருந்து பல விழிப்புணர்வுகளும், அறிவுரைகளும் வந்தாலும், மக்கள் இது போன்ற டிஜிட்டல் கொள்ளையில் சிக்கிவிடுகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்து பணம் இழந்தவருக்கு உரிய அறிவுரைகளோடு பணத்தையும் போலீசார் மீட்டு கொடுத்திருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்ற இளைஞர், தனக்கு இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து தெரியாத நபரிடம் மெசேஜ் செய்துள்ளார். அப்போது அந்த நபர் செல்வகணேஷிடம், நீங்கள் ரூ 5,000 பணம் அனுப்பினால் 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் உங்களுக்கு ரூ 50,000 பணம் கிடைக்கும் என ஆசை காண்பித்துள்ளார்.

இதை நம்பி செல்வகணேஷ் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரூ 5,000 பணத்தை Gpay ல் அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர் மீண்டும் மெசேஜ் செய்து நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் நீங்கள் தற்போது ரூ 75,000 வெற்றி பெற்றதாக கூறி பணத்தைப் பெற நீங்கள் ரூ 9,750 செலுத்த வேண்டும் எனக்கூறி மொத்தம் ரூ 14,750 பணத்தை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து செல்வகணேஷ் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 4ம் தேதி அன்று கொடுத்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின்படி அவர்கள் பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கை உடனடியாக ஃப்ரீஸ் செய்யப்பட்டது. பின்பு விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட ரூ 14,750 பணம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் செல்வகணேஷ்க்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.