அரசியல், கொள்கை எதிரிகள் பெயரை பயம் காரணமாக நேரடியாக குறிப்பிடவில்லையா? விஜய் சொன்ன விளக்கம் என்ன?

எதிரிகள் பெயரை நேரடியாக குறிப்பிடாததற்கு பயம் காரணமா என்பது குறித்து விஜய் விளக்கம் கொடுத்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (27.10.2024) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் விஜய் சில விமர்சனங்களை…

எதிரிகள் பெயரை நேரடியாக குறிப்பிடாததற்கு பயம் காரணமா என்பது குறித்து விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (27.10.2024) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் விஜய் சில விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மறைமுகமாகத் தாக்கு:

குறிப்பாகத் திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றுவதாகவும் மத ரீதியான அரசியல் செய்ய வரவில்லை என்றும் பேசினார். மேலும், பல இடங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளை விமர்சித்தார். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்றும் சாடினார். அதேநேரம் விஜய் தனது பேச்சில் யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

பயம் இல்லை:

இதற்கு அவரே இறுதியாக விளக்கமும் கொடுத்தார். அதில் அவர், “என்னடா இந்த விஜய் யாருடைய பெயரையும் நேரடியாகச் சொல்லவே மாட்டேன் என்கிறான். யார் பெயரையும் அழுத்தமாகச் சொல்ல மாட்டேன் என்கிறான். இவனுக்கு என்ன பயமா என்று ஒரு சில அரசியல் விஞ்ஞானிகள்.. அரசியல் நையாண்டி செய்வார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் பதில் ஒன்று தான்.. அவர்கள் பெயரை நான் சொல்ல முடியாமல் இல்லை.. சொல்லாமல் இருந்ததால் தைரியம் இல்லை என்றும் அர்த்தமும் இல்லை.

தாக்கி பேச வரவில்லை:

அதற்கெல்லாம் ஒரே காரணம் தான். இங்கு யாருடைய பெயரையும் சொல்லி அவர்களைத் தாக்க நாங்கள் அரசியல் களத்திற்கு வரவில்லை. தாக்கி பேசுவது, தரக்குறைவாகப் பேசுவது, மரியாதைக் குறைவாகப் பேசுவது ஆகியவற்றுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து, நல்ல அரசியல் செய்யவே இங்கு வந்துள்ளோம். எங்கள் அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, கொள்கை ரீதியான எதிரியாக இருந்தாலும் சரி அவர்களைக் கண்ணியமாகவே விமர்சிப்போம். ஆனால், அந்த விமர்சனங்கள் ஆழமானதாக இருக்கும்” என்றும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.