வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில், நடிகர் தனுஷ், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் மேல்முறையீடு செய்து, விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நடிகர் தனுஷும், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நடிகர் விஜய் வழக்கை விசாரித்த அதே நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டது. ’மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்ட போகிறீர்கள், வெளி நாட்டில் இருந்து கார் வாங்கியதற்காக வானிலா பறக்க முடியும் என்றார். வாங்கும் சோப் பில் கூட தினக்கூலி தொழிலாளர்கள் வரி கட்டுகிறார்கள் என்றும், அவர்கள் வரி விலக்கு கேட்டு வழக்கு போடுகிறார்களா? எனவும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
பின்னர், மீதி வரித்தொகையை செலுத்த தயாராக இருப்பதாக, நடிகர் தனுஷ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்களை வணிக வரித்துறையினர் இன்று மதியம் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்தில் வணிகவரித் துறையினர் விவரங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை 48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.