கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக, தேநீர் கடைக்குள் புகுந்து 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள டீ கடையில், விக்னேஷ் என்ற இளைஞர் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென கடைக்குள் புகுந்து விக்னேஷை கண்மூடித்தனமாக தாக்கியது. தொடர்ந்து, அந்த கும்பல் டீக்கடையையும் சூறையாடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. தாக்குதலுக்கு ஆளான விக்னேஷை பொதுமக்கள் மீட்டு, விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் ரஞ்சித் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.








