மதுரை வந்தடைந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை வரவேற்பு!

கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை வரும் கள்ளழகரை வழிநெடுகிலும் மண்டபங்களில் வரவேற்று வழிபாடு நடத்தப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26ம் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது. இதற்கிடையே, அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. நேற்று மாலையில் அழகர் மதுரை புறப்பாடு நடைபெற்றதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். கோவிலில் 18-ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா…’ என பக்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.

அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். அழகர், கருப்பணசாமி, அனுமார் வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், தீப்பந்தம் ஏந்தியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.