குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கோரி எமரால்ட் ஹைட்ஸ் சர்வதேச பள்ளி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
பாலியல் சுரண்டல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், சைபர் புல்லியிங் உள்ளிட்ட இணைய வழி தீமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும், சமூக ஊடக கணக்குகளை தொடங்க மற்றும் பயன்படுத்த வயது அடிப்படையிலான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி எமரால்ட் ஹயிட்ஸ் சர்வதேச பள்ளி இயக்குனர் சித்தார்த் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் சமூக ஊடக தளங்களை குழந்தைகள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஒழுங்கற்ற உணவு பழக்கம், தூக்க கோளாறு, மனச்சோர்வு, பதட்டம் ஏற்படுவதாகவும் சமூக ஊடக தளங்கள் மூலம் பல்வேறு தீய உள்ளடக்கங்களை கண்டு பாதிக்கப்படுகின்றனர். எனவே இதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.
இதனை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது குழந்தைகளின், சமத்துவ உரிமை, வாழ்வதற்கான உரிமை, தனிப்பட்ட சுதந்திரத்திற்காக உரிமை மற்றும் கல்விக்கான உரிமை என அடிப்படை உரிமைகளை பாதிக்கும் செயல் என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




