மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு: உத்தரவை பின்பற்றாத மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு : மாநிலங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான மாதவிடாய் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்த அறிக்கையை அளிக்காத மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் அறிக்கை அளிக்காத மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, இந்த விவகாரத்தில் சில மாநில அரசுகள் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை என தெரிவித்தார்.

அதை கேட்டு கடும் அதிருப்தியடைந்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிதாட்டுதல்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் அறிக்கைகளை அடுத்த விசாரணைக்குள் தாக்கல் செய்ய வேண்டும், அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும், மாதவிடாய் சுகாதாரத்தை அரசியலமைப்பின் 21 வது பிரிவின் அம்சங்களின் ஒன்றாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அதன் தீர்ப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அந்த உரிமை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? மத்திய அரசும் மாநில அரசுகளும் அடிப்படை உரிமையை எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றன? என்று கேள்விகளை எழுப்பினர்.

மேலும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் மாதவிடாய் சுகாதாரம் போன்ற பிரச்சனைகளின் காரணமாக இளம் பெண்கள் கல்வியை கைவிடும் சூழல் ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்றி அவர்களின் நலனுக்காகவே உச்ச நீதிமன்றம் மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கியது. எனவே மாநில அரசுகள், மத்திய அரசு கேட்கும் அனைத்து தகவல்களையும் தவறாமல் அறிக்கையாக கொடுக்க வேண்டும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியது வரும் என்று எச்சரித்து வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.