பெங்களூருவில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மழையிலிருந்து தப்பிக்க சுவரின் ஓரமாக ஒதுங்கியிருந்த நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மிகவும் துயரமானது. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







