மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பரிசுகள் விவரம்…. 19 காளைகளைப் பிடித்து கார்த்தி முதலிடம்….!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சுமார் 7:00 மணியளவில்  கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.

மொத்தம் 11 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளைப் பிடித்து முதலிடம் பிடித்தார். இவருக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

தொடர்ந்து 16 காளைகளைப் பிடித்து 2ஆம் இடம் பிடித்த மதுரை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தருக்கு இருசக்கரவாகனம் மற்றும் ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

11 காளைகளைப் பிடித்து போட்டியில் 3ஆவது இடத்தை பெற்ற மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதரருக்கு இருசக்கரவாகனம் மற்றும் 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஏ.வி.எம்.பாபுவின் காளை, சிறந்த காளையாகத் தேர்வுசெய்யப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் காளைக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. அதேபோல் மூன்றாவது சிறந்த காளையாக மதுரை கெனடி காளைக்கு எலெக்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.