மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு அடம் பிடித்து வரும் நிலையில்,  அது தொடர்பாக இன்று…

மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு அடம் பிடித்து வரும் நிலையில்,  அது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.  இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார்.

அப்போது,  தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது.  மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பேசலாம்.  ஆனால் செயல்படுத்த முடியாது.  தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டார்கள். மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு வைக்க திமுக அரசு அனுமதிக்காது என்று கூறினார்.  ஆனால் மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.  மேலும், வெளியே வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பைப் பெற்று தந்து இருக்கிறோம்.  இன்று ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும்.  டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும்.  எனவே இந்த அரசு அலட்சியமாகச் செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.

உரிய முறையில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்து இன்றைக்கு நாம் வாங்கிய தீர்ப்புக்கு குந்தகம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில் நாங்கள் இதனை அரசுக்கு உணர்த்தியிருக்கிறோம்.  இன்றைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள்.  இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரம் இருக்கிறது.

இந்த அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை.  ஆனால் அதிகாரத்தை மீறி செயல்படுகிறது.  இந்த அதிகாரத்தை மீறி செயல்படும் போது அதிமுக உரிய நடவடிக்கை எடுத்தது.  இதனால் மேகதாது குறித்து எந்த அறிவிப்பையும் கர்நாடகா வைக்கவில்லை. ஆனால் இந்த திமுக அரசு வந்த பிறகு இப்படி இந்த 28வது கூட்டத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.  இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.  திமுக அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது.  விவசாயிகள் மீது அக்கறையின்றி மெத்தனமாகச் செயல்படுகிறது.

இனிமேலும் இந்த அரசு தூங்கி கொண்டு இருக்காமல், விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறேன்.  இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள்.  நெருக்கமாக இருக்கிறார்கள்.  இப்படி நெருக்கமாக இருக்கும் போது மேகதாது விவகாரத்தில் ஏன் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது என்பது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.