மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனை அறிந்த எம்ஜிஆர் தான், அவரை அரசியலில் அறிமுகம் செய்து வைத்ததாகவும், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை 4 முறை ஆட்சியில் அமரவைத்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா தான் எனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைத்ததாக அமைச்சர் கே.கே.எஸ்,எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியது கேலிக் கூத்தாக உள்ளதாகவும் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், யாகவா ராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அமைச்சர் நடந்து கொள்வது தான் அவரது பதவிக்கு அழகு எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அமைச்சர் கே.கே.எஸ்,எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து, பண்பாடு இல்லாத ஒரு செயல். அந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அடையாளம் காட்டியதே அதிமுக தான்” என்று தெரிவித்துள்ளார்.







