டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் டெல்லியில்தான் அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றின் காரணமாகவும், ஆக்சிஜன் இல்லாமலும் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இப்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே அங்கு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா பொது ஊரடங்கில் டெல்லி மாநில அரசு பல தளர்வுகள் அறிவித்தது. அதன்படி டெல்லியில் கடைகள் திறக்கப்படுள்ளன. மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது. பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் இருந்தபோதிலும் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் முக க்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் பலர் முக க்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடுவது அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த படங்கள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடுவது குறித்த வாட்ஸ் ஆப் செயலியில் வந்த புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.







