வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் வல்லரசு நாடுகளுக்கே தன்ணீர் காட்டிய நாடு வட கொரியா. தெற்காசிய பிராந்தியத்தில், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாண்டி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு அமெரிக்காவையே தூங்க விடாமல் செய்தவர் அந்நாட்டின் தலைவர் கிங் ஜான் உன்.

கிம் என்றாலே தடைகளை மீறுபவர் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு, தனக்கென தனி பாதையை வகுத்துக்கொண்டு பயணித்த கிம் ஜாங் உன் ஆட்சி, தற்போது சறுக்கலை சந்தித்திருப்பதாகவே சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு வழிவகுத்திருப்பது தான் இந்த உணவு பஞ்சம்.
2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போதே, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பு முடங்கியதால், வடகொரியாவில் பலரும் வேலை வாய்ப்பை இழந்தனர். விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவையும் வராததால் விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்தது.

ஒவ்வொரு நாள் உணவுக்கும் அல்லாட வேண்டிய நிலை உருவான நிலையில், பலர் சோளம், அரிசி, பழங்கள் உள்ளிட்டவற்றையே சாப்பிட்டு நாட்களை கடத்துவதாக செய்திகள் வெளிவந்தன. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை கூட விட்டுவைக்காமல், உணவு பஞ்சத்தை சமாளிக்க, வீட்டில் வளர்க்கப்படும் செலப்பிராணிகளான நாய்களை உணவுக்காக தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு உணவு பஞ்சம் ஏற்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது அந்நாட்டு அரசு.

இந்த நிலையில், உணவு பஞ்சம் குறித்து முதல் முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கிம் ஜான் உன். இதுதொடர்பாக சியோலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியிருக்கிறார் கிம்.

இந்த உணவு பஞ்சத்துக்கு முக்கிய காரணியாக கூறப்படுவது, வடகொரியா மீதான பொருளாதார தடைகள்தான். கடந்தாண்டு வட கொரியாவைத் தாக்கிய சூறாவளி ஏற்படுத்திய சேதத்தால், வேளாண் துறையால் மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியாமல் போனதும், கொரோனா பரவலால் வேலை வாய்ப்பை இழந்ததும் காரணமாக குறிப்பிடப்படுகிறது.
வடகொரியாவில் கடந்த 1990 ஆண்டில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்படாத வண்ணம் அனைவரும் ஓரணியில் திரண்டு செயல்படுவோம் என அழைப்பு விடுத்திருக்கிறார் கிம் ஜான் உன்.

சுமார் 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள வடகொரியாவில், 1 கிலோ வாழைப்பழம் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், அதனை வாங்கி சாப்பிட கூட வழியில்லாத மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரும் கோரிக்கையாகும்.







