மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தில், 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

அப்போது பேசியவர், “41 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 2000 இடங்கள் பல் மருத்துவம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கிறது. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்கள், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்கள், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.

பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2026 – 2027 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726ஆகும். அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375. 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860.

இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2644. சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30,907. இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 26,956. இதில் மாணவர்கள் 9,105, மாணவிகள் 17,851 ஆகும்.

அரசு ஒதுக்கீடு இடங்கள்:

இளநிலை மருத்துவத்திற்கான (MBBS) மொத்த இடங்கள் 7,157. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு (State Quota) 4473 இடங்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2684. மேலும் பல் மருத்துவத்திற்கான (BDS) மொத்த இடங்கள் 1383. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 213. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 1170. 7.5% ஒதுக்கீட்டிற்கான மொத்த மருத்துவ இடங்கள் (MBBS) 537. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202. 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்:

சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (Management Quota) இடங்களில் MBBS இடங்கள் 1966 மற்றும் பல் மருத்துவ (BDS) இடங்கள் 580 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.

மருத்துவம் சார்ந்த படிப்புகள் (Allied and Health Care Courses) :

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் B.Sc Nursing, B.Pharm, இணை மருத்துவ படிப்புகள், Pharm.D (6-வருடம் மற்றும் 3-வருடம்), DGNM மற்றும் DIPLOMA IN PHARMACY படிப்புகளுக்கு 21.06.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 21.06.2026 முதல் 12.07.2026 வரை பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நீட் தேர்வு மட்டுமே உலகம் கிடையாது, இதைத் தவிர அதிக வாய்ப்புகள் உள்ளது. தோல்வியற்ற மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து போராட வேண்டும். தோல்வி அடைந்து விட்டோம் என்று பின்னோக்கி செல்லக்கூடாது – உனக்கு அதிக வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. பல் மருத்துவம் இடங்கள் கடந்த ஆண்டு விட இந்த வருடம் 200 இடங்கள் குறைந்துள்ளத. போலி ஆவணங்கள் கொடுத்த மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வருடம் 5 மாணவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். வருகின்ற 13-ஆம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் கலந்தாய்வு வரும் பதிமூன்றாம் தேதி நடைபெற உள்ளது.

முதல் முறை யார் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்கள், கிராமப்புற மாணவர்கள் யார் தேர்ச்சி பெற்று உள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும். ஆன்லைன் கலந்தாய்வு 13ம் தேதி நடைபெறும், ஆஃப்லைன் கலந்தாய்வு ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெறும். மதிப்பெண்களை வைத்து மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள், அதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு என்பது நீட் தேர்வு மட்டுமல்ல, மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகளுக்கு எதிரானது இந்த நீட் தேர்வு, தொடர்ந்து அதனை எதிர்த்து தான் வருகிறோம். உச்சநீதிமன்றம் அந்த நீட் தேர்வை கட்டாயமாக தினித்து உள்ளார்கள். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப் போராட்டத்தின் மூலமாக தான் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பொது மருத்துவம் கல்வி போன்றவை மாநில அரசுகளுக்கு விட வேண்டும். கண்டிப்பாக கல்வி மாநில பட்டியலுக்கு மாறும், தரமான மருத்துவ சேவை கொடுக்க வேண்டும், இந்த வருடம் இறுதியில் அது எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.