82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து…

டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த 82 வயது முதிய பெண்மணி ஷைலா கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமென அப்பகுதியில் பணியாற்றி வந்த காவலர் குல்தீப் சிங்கிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, குல்தீப் சிங் தனது உயர் அதிகாரி ஒருவரின் உதவியால் முதியவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஆன்லைனில் பதிவு செய்து கொடுத்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் அந்த ஷைலாவால் நடக்க முடியாத காரணத்தினால் அவரை தன் கைகளில் சுமந்து தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவியுள்ளார்.


இதுகுறித்து காவலர் குல்தீப் சிங் கூறுகையில், “அவர் இப்பகுதியின் மூத்த குடிமகள். அவரின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அடிக்கடி அவரை காணச் செல்வேன்” என்று தெரிவித்தார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக அவரால் நடக்க இயலவில்லை என்றும் தடுப்பூசி மையங்களில் சக்கர நாற்காலியை கொண்டு செல்ல முடியாது என்பதால் தான் சுமந்து சென்று அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி செய்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, “மக்களுக்கு உதவுவது எங்களது கடமை. எங்கள் உறவினர்களை விட்டு நாங்கள் பிரிந்து இருக்கிறோம். அதனால், உதவி தேவைப்படும் அனைவரையும் எங்கள் சொந்தம் என்று நினைத்து உதவி வருகிறோம்” என்றும் குறிப்பிட்டார். மேலும், ஏழைமக்களுக்கு உதவுங்கள், அப்போதுதான் நாம் இந்த கொரோனா தொற்றை கடந்து செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.