டெல்லி மதுபான கொள்கை வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.
அப்போது, இடைக்கால ஜாமின் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவர்களும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது.
அந்தவகையில், இன்று (10.05.2024) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் விதித்த நிபந்தனைகள் வருமாறு:
- ரூ.50,000 பிணைத்தொகை கட்ட வேண்டும்
- முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது
- தன்னிச்சையாக எந்த அரசு கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது
- வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவோ, வழக்கு விவரம் தொடர்பாகவோ பேச கூடாது
- வழக்கின் சாட்சிகளிடம் பேசவோ, சந்திக்க முற்படவோ கூடாது,
- வழக்கு தொடர்பான ஆவண கோப்புகளை ஆய்வு செய்யவோ, பார்க்கவோ முற்படக் கூடாது
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே தொண்டர்களை பார்த்து கையசைத்த கெஜ்ரிவால், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ” என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.







