சமீபத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் சிப்ஸ் பாக்கெட் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பேக் ஒன்று ரூ.1,54,467க்கு விற்பனை செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேஷன் உலகில் ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, திரை நட்சத்திரங்கள் முதல் மாடல் அழகிகள் வரை உலகளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது மெட் காலா நிகழ்ச்சிதான். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் மே முதல் திங்களன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், மாடல்கள், இசைப் பிரபலங்கள் என பல நபர்கள் வித்தியாசமான உடையுடன் வந்து சிவப்பு கம்பள வரவேற்பை பெருவர்.
நிதி திரட்டும் முயற்சியாக கடந்த 1948 ஆம் ஆண்டு இந்த மெட் காலா நிகழ்வு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் ‘The Garden of Time’ என்ற தீமின் கீழ் நடைபெற்றது. இதில் ரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன், கொலம்பிய நாட்டு பாடகி ஷகிரா, பாடகர் எட் ஷீரன், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியான கைலி ஜென்னர், அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற டேவின் ஜாய் ரேண்டால்ஃப், நடிகை ஜெனிஃபர் லோபஸ், இந்திய நடிகை ஆலியா பாட் என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் ஆலியா பட் அணிந்து வந்த புடவை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் மெட் காலா நிகழ்ச்சியில் கன்றுக்குட்டியின் தோலால் ஆன சிப்ஸ் பாக்கெட் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பேக் ஒன்று ரூ.1,54,467க்கு விற்பனை செய்யப்பட்டது. Balenciaga -ன் நிறுவனத்தின் வடிவமைப்பில் உருவான சிப்ஸ் பாக்கெட் மாதிரியான இந்த பேக்கை நடிகர் மைக்கேல் ஷானன் விற்பனை செய்தார்.
இதுபோன்று கடந்த ஜனவரி மாதம், பிரெஞ்சு பேஷன் ஹவுஸின் கிரியேட்டிவ் இயக்குனரான ஃபாரெல் வில்லியம்ஸால் வடிவமைக்கப்பட்ட சாண்ட்விச் பையை ரூ. 2,80,000-க்கு பேஷன் துறையின் முன்னணி நிறுவனமான லூயிஸ் உய்ட்டன் விற்பனை செய்தது.







