பாஜக ஆளவில்லை என்பதால் தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் புயல் மழை வெள்ளம் பாதித்ததை தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது திருமாவளவன் மேடையில் பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பேரிடர் என அறிவித்து, அதற்கு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் நிதி தர முடியாது என தெரிவித்து இருக்கிறார். ரூ.21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. வழக்கமாக தருகிற நிதியை தவிர்த்து, பாதிப்புகளை கணக்கில் கொண்டு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள். 4 மாவட்டங்களில் அதிகமாக பாதித்தது தூத்துக்குடி மாவட்டம் தான். காயல்பட்டினம் கூட மிக அதிக பாதிப்பை சந்தித்தது. ஒரு வார காலம் தண்ணீர் தேங்கிய நிலை இருந்து. மக்கள் பெரிதும் பதிக்கப்பட்டு இருந்தார்கள். பாஜக ஆளவில்லை என தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கதக்கது. நிர்மலா சீதாராமன் தன்னையே பிரதமர் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது. தமிழ்நாடு என்றால் அவருக்கு ஏன் இந்த கசப்பு என்று தெரியவில்லை.
எத்தனை அண்ணாமலையை கொண்டு வந்தாலும் உங்கள் வேலை இங்கு செல்லுபடியாகாது. அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தை இது காட்டுகிறது. சின்னத்தைப் பார்த்து வாக்களித்தால் தான் வாக்களித்தவர்களுக்கு நிம்மதி இருக்கும். மின்னணு இயந்திரம் எப்போது வந்தது என்று எண்ணி பார்க்க வேண்டும். அத்வானி தான் இதை எதிர்த்தார்.
EVM என்பது எந்த நேரத்திலும் யாராலும் தலையிட முடியும். யாராலும் அதை மாற்றி அமைக்க முடியும். எந்த அளவுக்கு வளர்ச்சி இருக்கிறதோ, அதே அளவு பாதிப்பும் இருக்கிறது. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு வந்து விட்டனர். 25 நாடுகளில் மட்டும் தன் இந்த EVM இயந்திரம் உள்ளது, இதில் 4 நாடுகள் தான் இதை நடைமுறை படுத்துகின்றன அதில் இந்தியாவும் ஒன்று. வாக்குச் சீட்டு மூலம் வாக்கு செலுத்தினால், நேரமாகும் என்று கூறுகிறீர்கள், தமிழ்நாடு கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அவர்கள் தில்லு முல்லு பலிக்காது, வெளிப்படையாக தெரிந்துவிடும்.
பல்வேறு மாநிலங்களில் பசுமாட்டை தெய்வமாக பார்க்கிறார்கள், மனிதனை அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் அனைவரையும் தெய்வமாக பார்க்கிறோம். அமித்ஷா சொல்லுகிறார் பாஜக 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று. எந்த நம்பிக்கையில் பேசுகிறார் என்றால் EVM இயந்திரம் அவர்கள் கையில் உள்ளது என்று தான் அர்த்தம். ஆண்ட பரம்பரை பற்றி பேசு என்று சொல்லி தருகிறார்கள், சாதி பெருமை பேசு என்று சொல்லுகிறார்கள்.
ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்தையும் கையில் கொண்டு வர அனைத்து வேலைகளையும் செய்து விட்டனர். நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனக்கு அப்போது உடல் நிலை சரியில்லை. நான் எந்த ஒரு கூச்சலும் அப்போது செய்யவில்லை. இவர்கள் நாட்டிற்கும் பெயர் மாற்ற நினைக்கிறார்கள். சட்டத்திற்கும் பெயர் மாற்றம் செய்ய நினைக்கிறார்கள். EVM இயந்திரம் வேண்டாம் என நினைக்கும் முதல் இயக்கம் விசிக என்று பெருமையாக சொல்லுகிறேன்.
மேலும் கோரமண்டல் கம்பெனியை முட வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வரும் 9 தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.







