குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ள தமது தாய் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி ஒருவர் தமது பாட்டியுடன் வந்து மனு அளித்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், குடும்ப வறுமை காரணமாக, தமது ஒரே மகளை, வயது முதிர்ந்த தமது தாயாரின் பராமரிப்பில் விட்டுவிட்டு, உறவினர்கள் மூலம் 4 ஆண்டுகளுக்கு குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
இந்தநிலையில், தொலைபேசி மூலம் தமது உறவினர்களை தொடர்பு கொண்ட சித்ரா, வீட்டு உரிமையாளர்கள் தம்மை கொடுமைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி கீர்த்தனா, தமது தாயை மீட்க வேண்டும் என உறவினர்களை நாடியுள்ளார். ஆனால், எந்த முயற்சியும் பலன் தராத நிலையில், வயது முதிர்த்த தமது பாட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுமி, தமது தாயாரை மீட்டுத் தரக்கோரி மனு அளித்துள்ளார்.







