வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் – இந்திய வானிலை மையம்

தென் கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அர்னாப் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ‘அர்னாப்’ (Arnab) புயலாக வலுவடைந்துள்ளது. இன்று, அக்டோபர் 26, 2026 அன்று காலை 05:30 மணி நிலவரப்படி, இது கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில், 15.4° வடக்கு அட்சரேகை மற்றும் 88.9° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் தீவுகள்) வடமேற்கே சுமார் 590 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 830 கி.மீ தொலைவிலும், பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 910 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று (அக்டோபர் 26) நள்ளிரவுக்குள் மேற்கு-மத்திய வங்கக் கடலில் ‘தீவிர புயலாகவும்’ (Severe Cyclonic Storm), அக்டோபர் 27 அன்று அதே பகுதியில் ‘மிகத் தீவிர புயலாகவும்’ (Very Severe Cyclonic Storm) வலுவடையக்கூடும்.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28, 2026 முற்பகலில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையை ‘மிகத் தீவிர புயலாக’ கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115-125 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.