“காவல் நிலைய உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணனன் என்பவர் உயிரி மாய்த்துக் கொண்ட சம்பவத்திற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை காவல் நிலைய கழிப்பறையில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல் நிலையங்களில் ஐயத்திற்கு இடமான வகையில் உயிரிழப்புகள் நிகழ்வது கவலையளிக்கிறது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலக்காய் வணிகரிடம் ஓட்டுனராக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், கடந்த சில நாள்களுக்கு முன் ஏலக்காய் ஏற்றி வந்த சரக்குந்து தீப்பிடித்து எரிந்தது குறித்து புகார் அளிக்க வந்ததாகவும், ஆனால், அவரையே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று பாலகிருஷ்ணனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விசாரணைக் கைதிகளாக இருந்தாலும், புகார் அளிக்க வந்தவர்களாக இருந்தாலும் காவல் நிலைய வளாகத்தில் அவர்களின் உயிருக்கு காவல்துறை தான் பொறுப்பு. அந்த வகையில் பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கும் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 7 காவல் நிலைய உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இனியும் அத்தகைய உயிரிழப்புகள் நிகழாதவாறு தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.