உலக அரசியலில் புதிய திருப்பம்: ஒரே மேடையில் ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் அடுத்த வாரம் சீனாவில் ஒரே மேடையில் சந்தித்துப் பேச உள்ளனர். APEC மாநாட்டையொட்டி ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் அணு ஆயுதக் கட்டுப்பாடு, ஈரான் போர், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பு குறித்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய உலகின் முக்கிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேச உள்ளதால் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அணு ஆயுதக் கட்டுப்பாடு: முக்கியப் பேச்சுவார்த்தை!

இந்த முத்தரப்புச் சந்திப்பில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பது முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது ட்ரம்ப்பின் நீண்டகால விருப்பமாகும். அமெரிக்காவும் ரஷ்யாவும் தலா 5,000-க்கும் அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், சீனாவின் அணு ஆயுதக் கையிருப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அந்நாடு தனது அணு ஆயுத வலிமையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான முறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் சீனா இதுவரை அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்தச் சந்திப்பில் உடனடியாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுவது சவாலானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஈரான், உக்ரைன் போர் விவகாரங்களும் விவாதத்தில்!

அணு ஆயுதக் கட்டுப்பாடு மட்டுமின்றி, ஈரான் போர் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவரது சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த ஆண்டு புதினைச் சந்தித்துப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், உக்ரைன் போர் இந்தச் சந்திப்பின் முக்கிய விவாதப் பொருளாக இருக்காது எனக் கூறப்பட்டாலும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

அமெரிக்கா – சீனா இடையே தொடரும் பதற்றம்!

இதற்கிடையே, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மோதல்களும் இந்தச் சந்திப்பின் முக்கியப் பின்னணியாக உள்ளன. குறிப்பாக, Nvidia நிறுவனத்தின் அதிநவீன சிப்கள் மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒரே மேடையில் சந்தித்துப் பேசுவது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். அதேபோல், ரஷ்ய அதிபர் புதினை கடைசியாக ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் சந்தித்திருந்தார். இதற்கிடையே, இந்த முத்தரப்புச் சந்திப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சீனாவும், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையும் ஏற்கெனவே தெரிவித்திருந்தன. உலகின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் சர்வதேச அரசியலிலும், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.