விண்ணில் பாய்ந்த Starship… வெடித்துச் சிதறிய ராக்கெட் பூஸ்டர்!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட Starship ராக்கெட்டின் 15-வது சோதனைப் பயணத்தில், விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்து 26 Starlink செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது. ஆனால், பூமிக்குத் திரும்பிய Super Heavy பூஸ்டரைப் பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், அது மெக்சிகோ வளைகுடாவில் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது.

முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் அமைப்பை உருவாக்கும் நோக்கில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் Starship ராக்கெட்டின் 15-வது சோதனைப் பயணத்தை நேற்று (நவம்பர் 13) வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Starbaseஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் 236 அடி உயர Starship விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்தாலும், அதன் முதல் நிலை ராக்கெட்டான Super Heavy பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவந்து பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அந்த பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது.

என்ன நடந்தது சோதனைப் பயணத்தில்?

Starship ராக்கெட் இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டது. முதலாவது Super Heavy பூஸ்டர் ராக்கெட்; இரண்டாவது விண்கலமான ‘Ship’. பூமிக்குத் திரும்பிய பிறகு இந்த இரண்டு பகுதிகளையும் மீண்டும் பிடித்து, எதிர்காலப் பயணங்களுக்காக மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. விண்ணில் ஏவப்பட்ட Super Heavy பூஸ்டர் சுமார் 2 நிமிடங்கள் 20 விநாடிகள் தனது என்ஜின்களை இயக்கி Starship விண்கலத்தை மேலே கொண்டு சென்றது. பின்னர், ‘Hot Staging’ எனப்படும் முறையில் பூஸ்டரும் விண்கலமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தன.

இதையடுத்து, பூஸ்டர் மீண்டும் டெக்சாஸில் உள்ள Starbase ஏவுதளத்தை நோக்கித் திரும்பியது. அங்கு ‘Chopsticks’ என்று அழைக்கப்படும் இரண்டு பிரம்மாண்ட இயந்திரக் கரங்கள் மூலம் பூஸ்டரைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திரும்பும் பயணத்தின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தானியங்கி முறையில் அந்தப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவை நோக்கித் திருப்பிவிடப்பட்டு, அங்கு தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது. இதுவரை டெக்சாஸில் உள்ள Starbase ஏவுதளத்தில் மூன்று முறை Super Heavy பூஸ்டர்களை ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாகப் பிடித்துள்ளது. ஆனால், விண்கலத்தின் மேல் பகுதியான Ship-ஐ இதுவரை ஏவுதளத்தில் பிடித்ததில்லை. முந்தைய 14 சோதனைப் பயணங்களிலும் விண்கலங்கள் கடலில் விழுந்தன அல்லது தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறின.

விண்ணை அடைந்த Starship… 26 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்!

பூஸ்டரை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தாலும், Starship விண்கலத்தின் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட சுமார் 27 நிமிடங்களில் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதையடுத்து, விண்கலத்தின் என்ஜின்களை இயக்கி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு மிஷன் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, தனது சுமையாகக் கொண்டு சென்ற 26 மேம்படுத்தப்பட்ட Starlink செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் பணியையும் தொடங்கியது.

இந்தச் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பணி ஒரு மணி நேரத்திற்குள் நிறைவடையும் என நேரடி ஒளிபரப்பில் ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்தது. சுமார் 22 மணி நேரம் விண்வெளியில் பயணித்து, பூமியை 15 முறை சுற்றிவந்த பிறகு மீண்டும் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்திற்குத் திரும்ப Starship திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலத்தின் இந்தத் திரும்பும் பயணத்திலாவது வெற்றிகரமாக மீட்புப் பணியை மேற்கொள்ள முடியும் என மிஷன் கட்டுப்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலவுப் பயணத்தில் NASA-வின் முக்கியப் பங்கு!

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் NASA-வின் Artemis திட்டத்திற்காக, Starship விண்கலத்தை நிலவு தரையிறங்கும் வாகனமாக உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக NASA நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குப் பல பில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது. இதற்கிடையே, Starship ராக்கெட் மேம்பாட்டிற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது சொந்த நிதியில் குறைந்தது 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

அதேபோல், ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனமும் NASA-வின் Artemis திட்டத்திற்காக நிலவில் தரையிறங்கும் விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் NASA மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் இலக்கிற்குப் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, விண்வெளியில் Starship விண்கலத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காகப் பல ராக்கெட்டுகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய சிக்கலான எரிபொருள் பரிமாற்றம் முக்கிய சவாலாக உள்ளது. இதனால் திட்டமிட்ட கால அட்டவணையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Starship ஏவுதலைப் பாராட்டிய NASA நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன், Artemis III திட்டத்தில் விண்வெளியில் Starlink தொழில்நுட்பத்தின் சில திறன்களைப் பயன்படுத்த ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், Starship விண்கலத்தின் பூமிக்குத் திரும்பும் பயணத்தையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், விண்கலத்தைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி 26 செயற்கைக்கோள்களை அனுப்பியிருந்தாலும், ராக்கெட்டின் இரு பகுதிகளையும் மீண்டும் பிடித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரும் ஸ்பேஸ்எக்ஸின் முக்கிய இலக்கில் இந்தச் சோதனைப் பயணம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.