கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. குறிஞ்சிப்பாடி வட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டியன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது கடந்த 13.11.2026 அன்று ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நோயைக் கட்டுப்படுத்தவும், மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அக்டோபர் 30-ம் தேதியே தொடங்கிய கண்காணிப்பு!
கடந்த அக்டோபர் 30-ம் தேதி கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட தாமனம்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீரென கோழிகள் உயிரிழப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்தப் பண்ணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட கோழிகளிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்தனர். முதற்கட்டப் பரிசோதனைக்காக அந்த மாதிரிகள் நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு (PDDL) அனுப்பப்பட்டன.
தொடர்ந்து, அருகிலுள்ள கோழிப்பண்ணைகளிலும் கோழிகள் அதிக அளவில் உயிரிழப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இதுவரை நவம்பர் 13-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
H5N1 தொற்று உறுதி: கோழிகளை அழிக்கும் பணி தொடக்கம்!
பல்வேறு கோழிப்பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஈரோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகங்களுக்கும், சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்திற்கும் அனுப்பப்பட்டன. மேலும், நவம்பர் 5-ம் தேதி கோழியின் உடல் மாதிரி, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வு முடிவில், காட்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது நவம்பர் 13-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் அதன் மையப் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கோழிகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி (SOP) மனிதாபிமான முறையில் அழிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட கோழிகளின் உடல்கள், ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்பட்டு, உரிய உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,550 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மையப் பண்ணை மற்றும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துக் கோழிகளையும் முழுமையாக அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நோய் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள்!
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- உயிரிழந்த கோழிகள் அனைத்தும் அறிவியல் முறையில் புதைக்கப்பட்டு வருகின்றன.
- பாதிக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள கோழிப்பண்ணைகள் தீவிரக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து கோழிகளை வெளியே கொண்டு செல்லவும், புதிய கோழிகளைக் கொண்டுவரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- உயிருடன் உள்ள கோழிகளுக்கு VIRKON-S மருந்து வாய்வழியாக வழங்கப்பட்டதுடன், பண்ணைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பண்ணைகளில் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் புகைமூட்டம் மூலம் கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அருகிலுள்ள கோழிப்பண்ணைகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோழிகளின் அசாதாரண உயிரிழப்புகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும், உயிரிழப்பு தொடர்பான விவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்!
கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்குரிய பிரிவில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பறவைகள் வழக்கத்திற்கு மாறாக உயிரிழப்பது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருத்துவ நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதுடன், நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரம்!
பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையில் கோழிகளை அழித்தல் மற்றும் உயிரிழந்த கோழிகளைப் பாதுகாப்பான முறையில் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 1,550 கோழிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மையப் பண்ணை மற்றும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கோழிகளையும் அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அதேபோல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. கிருமி நீக்கம், சுத்தம் செய்தல், புகைமூட்டம் மூலம் கிருமி அழித்தல் மற்றும் கோழிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பறவைக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் 2021-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி, கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கால்நடை பராமரிப்புத் துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.




