இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பச்சை நிற துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்த 2-வது வேளாண் பட்ஜெட் ஆகும். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், பட்ஜெட் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மாண்பினை எடுத்துக் கூறி தனது உரையை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண், உழவர்கள் நலன் பெற புதிய இணையதளம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும், 10 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு, தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதில் குறிப்பாக பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அண்மைச் செய்திகள்: ஆண்டு தோறும் வெங்காயம், தக்காளி சீராக கிடைக்க திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு
பயிர்க்காப்பீடு திட்டம்
- பருத்தி இயக்கம் – பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு.
- ரூ.50 கோடி செலவில் நீலமலையில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம்.
- மண்புழு உரம், பஞ்சகாவ்யம், தசகாவ்யம் உற்பத்தி செய்ய ஆலோசனை – அங்கக சான்று பெற பதிவு செய்தல் – அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல்.
- பயிர்க்காப்பீடு திட்டம் – இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தும் திட்டம் ஆகும். இதற்காக மாநில அரசின் பங்களிப்பாக 2337 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









