எதிர்க்கட்சிகள் தினமும் என் மீது சுமத்தும் 2 முதல் 3 கிலோ விமர்சனங்கள் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தென்மாநிலங்களுக்கு வருகை தந்தார். கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் சென்னை- மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் காந்தி கிராமியி பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்த மோடி, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து இன்று தெலுங்கானா சென்றுள்ள பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார். தொடர்ந்து அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை காரணமாக, சிலர் காலை முதல் மாலை வரை என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஆனால் இவை எதுவும் எனக்கு முக்கியமில்லை. இந்த யுக்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் சோர்வாக இருக்கிறேனா? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு 2-3 கிலோ மோசமான குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் வருகின்றன, ஆனால் நான் அதை ஊட்டச்சத்தாக மாற்றுகிறேன். என்னையும், பாஜகவையும் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தெலுங்கானாவின் நிலையும், மக்களின் வாழ்க்கையும் மேம்படும் என்றால், எங்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால், தெலுங்கானா மக்களை விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகள் நினைத்தால், பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை விமர்சனம் செய்ய மட்டுமே எதிர்கட்சிகளுக்கு தெரியும்.
தெலுங்கானா பெயரை பயன்படுத்தி முன்னேறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தை பின்னோக்கி தள்ளிவிட்டது வருத்தம் அளிக்கிறது. தெலுங்கானா அரசு மற்றும் தலைவர்கள் மாநிலத்தின் திறனுக்கும், மக்களின் திறனுக்கும் எப்போதம் அநீதி இழைக்கின்றனர். தெலுங்கானா மக்கள் மிகவும் நம்பிய கட்சியானது, மாநிலத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. இருள் சூழும் நேரத்தில் அங்கு தாமரை மலரும்.
இதைத்தொடர்ந்து ராமகுண்டம் பகுதியில் உரதொழிற்சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்து பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.







