மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே பயனடைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் டேன் கேர் 2022 சார்பில் 14வது சுகாதாரத்துறை மாநாடு மற்றும் சுகாதாரத்துறை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ”கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு காலத்தில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு மிகவும் உதவியாக இருந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் அதிலிருந்து மீண்டு வர இந்த அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்கள் அரசுக்கு உதவியாக இருந்தன. சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் தற்போது வரை மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மூன்று, நான்கு நாட்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மருத்துவ துறையில் உலகிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. 36 அரசு மருத்துவமனைகள், இஎஸ்ஐ மருத்துவமனைகள், 34 தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 74 மருத்துவமனைகள் இருக்கிறது. உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு
இந்தியாவின் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது. அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, தொழில்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் , உலக நாடுகள் பலவும் தமிழகத்தில் தொழில் துவங்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மருத்துவமும் தொழில்துறையில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். உலக நாடுகளில் எங்கும் இந்த சாதனை இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா சமீபத்தில் சென்னைக்கு வந்த போது கூட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கேள்விப்பட்டு பாராட்டினார். மேலும் ஜனவரி மாதம் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் மாநாட்டில் மக்களே தேடி மருத்துவம் திட்டம் குறித்து பேசவும் , மற்ற இடங்களில் இத்திட்டத்தை கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் அவர் என்னை அழைத்துள்ளார். இன்றைக்கும் பல மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இது போன்ற உபகரணங்களை தமிழகத்தில் செய்வதன் மூலம் மருத்துவ துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும்” என்று தெரிவித்தார்.







