மக்களின் பிரச்னை பற்றி கவலைப்படாமல் தங்களை தற்காத்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சிப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், அரசின் குடிமனை பட்டா திட்டத்திற்கு வரவேற்பு அளிப்பதாகவும், மத்திய அரசு, வேலை வாய்ப்பு திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிதான் காரணம் எனவும், இதனை கண்டித்து வரும் 30ஆம் தேதி, மாநிலம் முழுவதும் சைக்கிள் பேரணி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, மக்கள் பிரச்னைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்ள முயற்சிப்பது போல எதிர்க்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.







