“கீழடி அருங்காட்சியகத்தை பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் பார்வையிட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் பார்வையிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ. 694 கோடி மதிப்பிலான திட்டப் பனிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,

“பொருநை தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை நிரூபிக்கும் ஆய்வு நடக்கக் கூடாது என மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. ஆய்வு முடிவுகள் வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இலக்கியம் மட்டுமே சான்றாகாது என்பதால் அறிவியல் சான்றுடன் நிரூபிக்க விரும்புகிறோம். 2,000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்றுப் போக மாட்டோம்.

கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும். அப்படி பார்த்தால் தான் தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து தெரியும். நம்மை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் கூட, தமிழ் என்றாலே திமுகதான் என்று மனதுக்குள் நினைக்கின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. காந்தியின் பெயரை நீக்கியதுடன் 40% நிதியை மாநிலங்கள் எற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.

நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோயிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொண்டவர் மு.கருணாநிதி. அவர் வழியில், இக்கோயிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1991ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த நெல்லையப்பர் கோயில் தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் இருந்து நெல்லையப்பர் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.