மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வைகோ.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதுபோலவே சில ஆண்டுகளாக வைகோ கலந்துகொள்ள முடியாத நிகழ்வுகளில் துரை வைகோ கலந்துகொண்டு வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டுமென மதிமுகவுக்குள் கோரிக்கைகள் எழுந்தன. உள்ளாட்சித் தேர்தலிலும் பல இடங்களில் துரை வைகோ பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் இன்று நடைபெற்றது. அதில், துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்கலாமா என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மொத்தமாக பதிவான 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு ஆதரவாக 104, எதிராக 2 வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்குவதென்றால் நானே வழங்கி இருக்கலாம், தொண்டர்களின் விருப்பப்படி முடிவெடுப்பதற்கு இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்துள்ளேன், முழுநேர கழகப் பணியை மேற்கொள்ள அவருக்கு அனுமதியளிக்கப்படுகிறது. சுற்றுப்பயணம் செல்லவும் துரை வையாபுரிக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
துரை வைகோவை நியமித்தது வாரிசு அரசியல் இல்லை என்று தெரிவித்த அவர், பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றும் கூறினார்.