கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதலை, மத்திய அரசு அளித்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல், கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகமான எப்டிஏ, கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி தர மறுத்தது. மேலும் நிரந்தர பயன்பாட்டிற்கு கூடுதல் தரவுகளை அனுப்புமாறும் எப்டிஏ அறிவுறுத்தியது.
இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி, பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை, உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து கோவாக்சின் தடுப்பூசி குறித்த முதல்கட்ட ஆய்வு கூட்டம், வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தால்தான், கோவாக்சின் தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்கள், பிற நாடுகளுக்கு செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.







