டெல்டா வகை கொரோனா இளைஞர்களை தாக்கும் என்பதால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமெரிக்க மக்களை ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிகம் பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதிகம் பேர் மரணம் அடைந்தனர். இதனால் இது குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் பரவியது டெல்டா வகை மாறுபட்ட கொரோனா என்று கூறியது. இது முதல் அலையில் பரவிய கொரோனாவை விடவும் அதிக திறன் மிக்கது என்றும் அதிகம் பேருக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“புதிய வகை டெல்டா கொரோனா, தடுப்பூசி போடாதவர்களை அதிகம் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. இது ஒரு கவலைக்குரிய விஷயம். டெல்டா வகை என வல்லுநர்கள் அழைக்கும் இந்த வகை கொரோனா மிகவும் எளிதாக பிறருக்கு பரவும் தன்மை கொண்டது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. குறிப்பாக இளைஞர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்றைக்கு அமெரிக்காவில் கடந்த 150 நாட்களில் 300 மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நான் அதிபராகப் பதவி ஏற்றபோது, நாடு சிக்கலில் இருந்தது. இன்றைக்கு வைரஸ் தாக்கம் குறைந்திருக்கிறது. நமது பொருளாதாரம் மீண்டிருக்கிறது. இவை எல்லாம் கடந்த நான்கு மாதங்களில் நடந்திருக்கிறது.
மக்கள் அதிக அளவு தடுப்பூசி போட்டுக்கொண்ட பகுதிகளில் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி அதிகம் பேர் போட்டுக்கொள்ளாத பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.”
இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.