கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்த விஜய்யின் “வாத்தி” கம்மிங் பாடலுக்கு மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக மதுரையில் 5921பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரானா தொற்று பாதிப்பு 300க்கும் கீழ் குறைவாகவே உள்ளது. மேலும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 1109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் பாடலுக்கு நடனமாடியும், அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கியும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட கொரோனா நோயளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருவதையொட்டி மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விஜய்யின் ரசிகர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக வார்டுக்குள் பிபிஇ கிட் கவச உடை அணிந்து அவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கியதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களும் விஜய் ரசிகர்களோடு சேர்ந்து நடனமாடியது நோயாளிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.







