கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக், டீக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவிவிட்டது.அதற்கு தமிழ்நாடும் விலக்கல்ல. நான் மது அருந்துவது கிடையாது அதனால், மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது. மதுகடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், இதனை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் H.ராஜா பிரச்சாரம் செய்து மதுக்கடைகளை மூடச் சொல்லிவிட்டு பின்பு தமிழகததில் மூட சொல்லட்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்தான். அவற்றின் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும்” என தெரிவித்தார்.







