கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!

கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்…

கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமே கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் கொரோனாவிற்கு தடுப்பூசி இருப்பதால் கொரோனா முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். அதனால் முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். இதுவே கொரோனா பரவுவதற்குக் காரணமாக அமைகிறது. ஆறு மாதத்திற்கு முன்பு இருந்த அளவிற்கு இந்தியாவில் தற்போது கொரோன பரிசோதனையுமில்லை தனிமைப்படுத்தலும் இல்லை. இதன்காரணமாக உருமாறிய கொரோனா மிக வேகமாகப் பரவக்கூடியதாக இருக்கும். இதனால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தைத் தடுக்கமுடியாது” என அவர் கூறியுள்ளார்.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 43,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களில் மட்டும் 67 சதவீதம் உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. மேலும் இதுவரை 1,59,755 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றியும் ஊரடங்கு நடவடிக்கைகளையே மீண்டும் அமல்படுத்துவது பற்றியும் பரிசீலனை நடைபெற்றுவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.