கொரோனா பீதியைத் தொடர்ந்து, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என மார்த்தட்டி வந்த வட கொரியாவில் முதல் முறையாக மேக்சிமம் எமர்ஜென்சி என அழைக்கப்படும் மிக உயரிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கமே இல்லை என அந்நாட்டு அரசு முதலில் கூறி வந்தது. இந்நிலையில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும், சீனாவும், ரஷ்யாவும் கொரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்க முன் வந்தபோதும், கொரோனா எங்களை ஒன்றும் செய்யாது, அவை எங்களுக்கு தேவையில்லை என வட கொரியா உதாசீனப்படுத்தியது. அதற்கு காரணம் அந்நாட்டின் எல்கைகள் அனைத்தும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், அதாவது கொரோனா தாக்கம் தொடங்கியது முதலே முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு பாதிப்பில்லை என வட கொரியா கூறியது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன, இதனால் பதற்றமடைந்த வட கொரியா அதிபர் அதிபர் கிம் ஜான் யுன் , இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ‘மெக்சிமம் எமர்ஜென்சி’ அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
மெக்சிமம் எமர்ஜென்சியின் நோக்கமே குறுகிய காலத்தில் கொரோனோ தொற்றை முற்றிலும் ஓழிக்க வேண்டும் என்பதே என அந்நாட்டு உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.








