தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.
இன்று மட்டும் மொத்தம் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் கொரோனா அறிகுறிகளுடனும், சந்தேகத்துடனும் வருபவர்களுக்கு பரிசோதனை மையங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. நேற்றுவரை மொத்தம் 8,970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று உடல்நலம் தேறி இன்று 764 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இன்றைய நிலவரப்படி மொத்தம் 10,033 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும் நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 771 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 316 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 134 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 85 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 34, 73, 116 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வரை 34,25,057 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
-மணிகண்டன்








