பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு; எஸ்.வி. சேகர் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அவரின் இந்த பதிவிற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், இதையடுத்து எஸ்.வி. சேகர் அப்பதிவை நீக்கி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், நடிகர் எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது. இந்நிலையில், தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுக்களை விசாரித்த நீதிபதி, பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு வழக்கில் ‘பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிகட்டி விடமுடியாது. இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரம், தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.