சந்திராயன் 3 ராக்கெட் செலுத்தப்பட்டதை கொண்டாடும் விதமாக, விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உடன் படித்த முன்னாள் மாணவர்கள் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.
சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்திருந்த நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர்.
உலகமே வியந்து பார்த்த சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா முத்தையா ஆவார். சந்திரயான் 2 திட்ட இயக்குனராக பணியாற்றிய வனிதா முத்தையா வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
வீரமுத்துவேல் தலைமையிலான குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை தயாரித்தது. மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டில் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியரின் மகனான வீரமுத்துவேல் சந்திரயான் 3 விண்கலத்திற்கு ஆற்றிய பணி அளப்பறியது.
இந்நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து, அதனை கொண்டாடும் விதமாக விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த ரயில்வே பள்ளி இடிக்கப்பட்ட இடத்தில், வீரமுத்துவேல் பயின்ற பள்ளியில் அவர் உடன் படித்த முன்னாள் மாணவர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.







