”சந்திரயான்-3” இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்… பிரதமர் மோடி பெருமிதம்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள…

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்திருந்த நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர்.

விண்கலத்தை ஏந்திச்செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் நிலையில், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோவர் கருவி 100 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 4-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்ததோடு, விஞ்ஞானிகள் இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

உலகமே உற்று நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வாக ‘சந்திரயான் – 3’ விண்ணில் சீறிப்பாயும் காட்சியை நேரில் காண, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் குவிந்தனர். அந்த வகையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.

https://twitter.com/narendramodi/status/1679789062561857537

இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய வரலாற்றை சந்திரயான்-3 எழுதியிருக்கிறது. இந்தியர்களின் கனவுகளும், லட்சியங்களும் இன்னும் அதிக உயரமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த முக்கியமான சாதனை, நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நமது விஞ்ஞானிகளின் புத்தி கூர்மைக்கும்நான் தலை வணங்குகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.