தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கொ*லை, கொ*ளை மற்றும் போ*தைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. துறையூர் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவி சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னைச் சந்திக்க வந்த ஒருவரைத் தாக்கியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதன் காரணமாக ஆட்சியரின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், இச்சம்பவங்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது, கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் எவ்வாறு செயல்படுவது என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.




