தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி பெய்து வருகிறது. அக்டோபரில் இயல்பு அளவைக் காட்டிலும் அதிகமாக மழை பொழிந்தது. நவம்பர் 2026 மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழையே பெய்து வருகிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் எனவும்சென்னை வானைலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் 1.5 கிமீ உயரம் வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இதன் காரணாமாக தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11), சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




